மத்தியப் பிரதேச மாநிலத்தில், திரைப்பட பாணியில் ஒரு நிஜச் சம்பவம் நடந்துள்ளது. அஹர்வாடா கிராமத்தைச் சேர்ந்த சஷாங்க் என்பவருக்கும் சிம்ரன் என்பவருக்கும் கடந்த 2024-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால், திருமணமான ஆறே மாதங்களில் சிம்ரனுக்கும் ராஜ் திவாரி என்ற இளைஞருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

சஷாங்க் வேலைக்குச் சென்ற நேரத்தில் ராஜ் வீட்டிற்கு வந்து சென்றது கணவனுக்குத் தெரியவந்தபோது குடும்பத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. தன் காதலை ஏற்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்றும், கணவனைப் பொய் வழக்கில் சிக்க வைப்பேன் என்றும் சிம்ரன் மிரட்டியதால் சஷாங்க் செய்வதறியாது திகைத்துப் போனார்.

தினசரி சண்டையாலும் மிரட்டல்களாலும் மனமுடைந்த சஷாங்க், இறுதியில் ஒரு அதிரடி முடிவை எடுத்தார். “மனைவியின் மகிழ்ச்சி காதலனுடன் இருப்பதில் தான் இருக்கிறது” என்று உணர்ந்த அவர், மனைவியையும் அவரது காதலனையும் அழைத்துக்கொண்டு காவல் நிலையம் சென்றார்.

அங்கு காவல்துறையினர் முன்னிலையில், தனது மனைவியை அவரது காதலனிடம் சட்டப்பூர்வமாக ஒப்படைப்பதாக எழுத்துப்பூர்வமாகஎழுதிக் கொடுத்தார். காதலன் ராஜும் சிம்ரனை ஆயுள் முழுவதும் மனைவியாகப் பார்த்துக் கொள்வதாக உறுதியளித்தார். மனைவியின் காதலுக்காகத் தனது வாழ்க்கையையே விட்டுக் கொடுத்த கணவனின் இந்தச் செயல் அந்தப் பகுதியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.