தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த முத்தியம் ரெட்டி-கல்பனா தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். தனியார் மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்த்து வந்த கல்பனாவிற்கு, சிண்டு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த நிலையில், தங்களது கள்ளத்தொடர்புக்கு கணவர் தடையாக இருப்பதாக கல்பனா கருதினார்.

இதனால் காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்ய திட்டமிட்ட அவர், சில நாட்களுக்கு முன்பு முத்தியம் ரெட்டியைக் கொடூரமாகக் கொலை செய்தார். பின்னர், ஒரு மைதானத்தில் ஜேசிபி எந்திரம் மூலம் குழி தோண்டி உடலைப் புதைத்துவிட்டு, கணவரைக் காணவில்லை என்று நாடகமாடி போலீசில் புகாரும் அளித்தார்.

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் கல்பனாவின் கள்ளத்தொடர்பு வெளிச்சத்திற்கு வந்தது. அவரிடம் போலீசார் துருவித் துருவி விசாரித்தபோது, காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

அவர் அடையாளம் காட்டிய மைதானத்தில் இருந்து முத்தியம் ரெட்டியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. இந்தத் துயரச் சம்பவம் தொடர்பாக கல்பனா மற்றும் அவரது காதலன் சிண்டு ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.