சீனாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்தபடி, இந்தியாவின் ஐதராபாத்தில் உள்ள ஒரு நோயாளிக்கு 5ஜி இணைய தொழில்நுட்பம் மற்றும் ரோபோட் உதவியுடன் சிறுநீரக அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. ஐதராபாத் மருத்துவமனையில் நோயாளிக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, 3டி கேமராக்கள் மற்றும் நுட்பமான அறுவை சிகிச்சை கருவிகளுடன் மருத்துவர்களும் செவிலியர்களும் தயாராக இருந்தனர்.
அப்போது சுமார் 3,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சீனாவில் இருந்தவாறே, இந்திய சிறுநீரக நிபுணர் சையது முகமது காவுஸ் என்பவர் நிகழ்நேர 3டி படங்களை பார்த்து ரோபோட் கைகளை இயக்கி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
சீனாவில் உருவாக்கப்பட்ட அதிநவீன ரோபோட் அமைப்புகள் மற்றும் அதிவேக 5ஜி தொழில்நுட்பத்தின் மூலம், நோயாளிக்கு மாற்று சிறுநீரக குழாய் பொருத்தும் இந்த கடினமான அறுவை சிகிச்சை வெறும் 90 நிமிடங்களில் வெற்றிகரமாக முடிவடைந்தது.
மருத்துவத்துறையில் மைல்கல்லாக கருதப்படும் இந்த சாதனையை இந்தியாவில் உள்ள சீன செய்தி தொடர்பாளர் யூ ஜிங் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். தொழில்நுட்ப வளர்ச்சியால் இவ்வளவு நீண்ட தூரத்தில் இருந்து ஒரு நோயாளிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
