அதிமுக கட்சியின் மூன்று எம்எல்ஏக்கள் இன்று தங்களுடைய பதவியை ராஜினாமா செய்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தில் உடனடியாக இணைந்தது பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தற்போது அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது, தமிழக அரசியல் வரலாற்றிலேயே இல்லாத வகையில் மோசமான குதிரை பேர அரசியலை நடத்தி, தனது மைனாரிட்டி ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள முயலும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு கண்டங்கள். சுத்த சுயம்பிரகாச தூய சக்தி என்று தன்னைத் தானே அறிவித்துக்கொண்டு அரசியலில் குதித்த ஒரு திரை உலகப் பிரபலம், தற்போதைய அரசியல் சூழலில் மக்களின் முழுமையான ஆதரவு தனக்குக் கிடைக்கவில்லை என்பதை உணர்ந்துள்ளார்.
இதனால், தான் அமைத்துள்ள பொய்க்கால் குதிரை ஆட்சியைக் காப்பாற்ற பல்வேறு தகிடுதத்த அரசியலில் அவர் ஈடுபட்டு வருவது வெட்கக்கேடான ஒன்றாகும். தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 126 தொகுதி மக்கள் தனக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள் என்பதைச் சிறிதும் உணராமல் தவெக தலைமை செயல்படுகிறது.
தான் எந்தக் கட்சியை ‘தீய சக்தி’ என்று விமர்சித்து களம் கண்டாரோ, அந்தக் கட்சியின் தயவில் வெற்றி பெற்ற ஒருசில கட்சிகளைத் தேடிப்போய் ஆதரவு கேட்பதும், ‘புஷ்பா’ பட பாணியில் சோஃபா தேடிப் போய் ஆதரவு பெறுவதும் ஒரு நேர்மையான அரசியல்வாதியின் செயலா? என்று வாக்களித்த மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அதிமுக தொண்டர்களின் கடுமையான உழைப்பால் வெற்றி பெற்ற 3 சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து, கோட்டையின் கீழ்த்தளத்தில் உள்ள சபாநாயகர் அறையில் ராஜினாமா கடிதம் எழுதி வாங்குவதும், அடுத்த 10 நிமிடத்தில் முதல் மாடியில் உள்ள தவெக அமைச்சர் ஒருவரின் அறையில் அவர்களுக்குக் கட்சி உறுப்பினர் அட்டை வழங்குவதும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒரு குதிரை பேர சதி நாடகமாகும். இது தவெக அரசின் தகிடுதத்த வேலைகளை அம்பலப்படுத்தியுள்ளது.
இத்தகைய துரோகச் செயல்களால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அசைத்துப் பார்க்கலாமா, வீழ்த்திவிடலாம் என்று யாராவது நினைத்தால் அது பகல் கனவாகவே முடியும். ‘ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை’ என்பதற்கு ஏற்ப, அடுத்தவர்களின் முதுகில் ஏறி பயணம் செய்வதில் தான் தங்களின் வாழ்வு இருக்கிறது என்று செயல்படும் இந்த புதிய கராகாட்ட கோஷ்டிக்குத் தமிழக மக்கள் விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று பதிவிட்டுள்ளார்.
