மெக்சிகோ நாட்டின் சினாலோவா மாகாணத்தில் உள்ள ஒரு தங்கச் சுரங்கத்தில் கடந்த மார்ச் 25 அன்று ஏற்பட்ட திடீர் விபத்து, உலகையே உறைய வைத்தது. சுரங்கத்தின் கழிவுநீர் அணை உடைந்ததில், சுமார் 985 அடி ஆழத்தில் சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அங்கிருந்த 25 பேரில் 21 பேர் தப்பினாலும், நான்கு பேர் பாதாள இருளில் சிக்கினர்.

இதில் 42 வயதான பிரான்சிஸ்கோ ஜாபடா (Francisco Zapata Nájera) என்பவர், சுமார் 14 நாட்கள் வெளிச்சமே இல்லாத இருண்ட சுரங்கத்திற்குள், இடுப்பளவு தண்ணீரில் உயிருக்குப் போராடி வந்துள்ளார். இரு வார போராட்டத்திற்குப் பிறகு, மெக்சிகோ ராணுவ வீரர்கள் அவரை உயிருடன் மீட்டுள்ளனர்.

சுமார் 300 மணிநேர இடைவிடாத தேடுதல் வேட்டைக்குப் பிறகு, ராணுவ மூழ்காளர்கள் இருளில் ஒரு சிறிய டார்ச் லைட் மின்னுவதைக் கண்டு அவரை அடையாளம் கண்டனர். அந்த இக்கட்டான நிலையிலும் ஜாபடா தனது டார்ச் லைட்டை அணைத்து அணைத்து எரியவிட்டு தனது இருப்பை உணர்த்தியுள்ளார். அவரைக் கண்டுபிடித்தபோது, “நான் என் நம்பிக்கையைக் கைவிடவில்லை” என்று அவர் அமைதியாகக் கூறியது மீட்புப் படையினரையே நெகிழ்த்தியது.

சுரங்கத்தில் நீர் அதிகமாக இருந்ததால் உடனடியாக அவரை வெளியே கொண்டு வர முடியவில்லை. இதனால் அவருக்குத் தேவையான உணவு மற்றும் நீர் வழங்கப்பட்டு, சுமார் 20 மணிநேரம் தண்ணீரை வெளியேற்றிய பிறகே அவர் பத்திரமாக மீட்கப்பட்டார். மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் இந்த மீட்புப் பணியைப் பாராட்டியுள்ள நிலையில், இன்னமும் தேடப்பட்டு வரும் மற்றொரு தொழிலாளியும் உயிருடன் கிடைப்பார் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.