அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தின் வடமேற்குப் பகுதிகளை இந்த வாரம் சக்திவாய்ந்த குளிர்காலப் புயல் தாக்கி வருகிறது. மணிக்கு 70 மைல் வேகத்திற்கும் அதிகமாக வீசிய சூறாவளி காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்ததுடன், மின் கம்பிகளும் சேதமடைந்தன. இந்நிலையில், பலத்த காற்றில் ஒரு பெண் தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சி சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஹாம்பர்க் பகுதியைச் சேர்ந்த டயான் மில்லர் என்பவர், லாக்கவன்னாவில் உள்ள தனது மகளின் வீட்டின் கதவைத் திறந்தபோது, பலத்த காற்றால் கால்கள் நிலை தடுமாறி புதர்களுக்குள் தூக்கி வீசப்பட்டார். இந்த சம்பவம் அருகிலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், “இது மிக வேகமாக நடந்தது. என்ன நடக்கிறது என்பதே எனக்குப் புரியவில்லை. ஒரு மில்லியன் ஆண்டுகளில் கூட காற்றில் காத்தாடிபோல் பறப்பேன் என்று நான் நினைத்ததில்லை,” என்றார்.
மேலும், “கதவைத் திறந்ததும் காற்று என்னைப் தூக்கி வீசியது. இவ்வளவு பலத்த புயலை நான் முன்பு அனுபவித்ததே இல்லை,” எனத் தெரிவித்தார். திங்கட்கிழமை அன்று மேற்கு நியூயார்க் முழுவதும் மணிக்கு 70 மைல் வேகத்தைத் தாண்டிய காற்று வீசியதாக வானிலைத் துறை தெரிவித்தது. பஃபலோ விமான நிலையத்தில் மணிக்கு 79 மைல் வேகத்தில் காற்று வீசியது. இது, 1967-ஆம் ஆண்டு பதிவான 82 மைல் வேக சாதனைக்கு மிக அருகில் இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
இந்த குளிர்காலப் புயல் கிரேட் லேக்ஸ் மற்றும் வடகிழக்கு அமெரிக்கப் பகுதிகளை கடுமையாக பாதித்துள்ளது. இதன் காரணமாக, 4 கோடிக்கும் அதிகமான மக்கள் குளிர்கால வானிலை எச்சரிக்கையின் கீழ் உள்ளனர். மத்திய மேற்குப் பகுதிகளை தாக்கிய ‘குண்டுச் சூறாவளி’ (Bomb Cyclone) தொடர்ச்சியாக இந்த புயல் உருவாகி, ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்தடை ஏற்பட்டுள்ளது.
Video shows the moment a gust of wind sent a woman “flying” into a yard on Monday, Dec. 29, in Lackawanna, NY. Diane Miller was visiting her daughter just south of Buffalo when she was swept off her feet. pic.twitter.com/UnLROKUgsN
— Eyewitness News (@ABC7NY) December 30, 2025
புயலுக்குப் பின்னர் ஆர்க்டிக் காற்று வீசத் தொடங்கியதால், வெப்பநிலை கடுமையாக வீழ்ச்சியடைந்து, பல இடங்களில் கனமழை மற்றும் கடும் பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. இந்த குளிர் அலை தெற்கே வெகுதூரம் வரை நீடிக்கும் என்றும், புளோரிடா பன்ஹேண்டில் பகுதிகளிலும் உறைபனிக்குக் கீழான வெப்பநிலை நிலவக்கூடும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
மேற்கு மற்றும் மேல்நிலை நியூயார்க்கின் சில பகுதிகளில் திங்கட்கிழமை மட்டும் ஒரு அடிக்கு மேல் பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. வரும் நாட்களில் மொத்தமாக மூன்று அடி வரை பனி பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. பஃபலோவில் மணிக்கு 81 மைல் வேகத்தில் வீசிய காற்றால் மரங்கள், மின் கம்பிகள் சாய்ந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல், சைராகஸ் பெருநகரப் பகுதி உள்ளிட்ட சில இடங்களில் ‘வெள்ளையடிப்பு’ (Whiteout) நிலைமைகள் ஏற்படக்கூடும் என எச்சரித்துள்ளார்.
“பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் அவசியமற்ற பயணங்களை முழுமையாக தவிர்க்க வேண்டும்,” என்று அவர் சமூக வலைதளமான X-இல் தெரிவித்துள்ளார்.
