வயர்லெஸ் இயர்போன்கள் எனப்படும் கம்பியில்லா காதொலிக் கருவிகள் தற்காலத்தில் அத்தியாவசியத் தேவையாக மாறிவிட்டாலும், அவற்றிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு புற்றுநோயை உண்டாக்கும் என்ற அச்சம் மக்களிடையே நிலவுகிறது. குறிப்பாக இவை மைக்ரோவேவ் அடுப்பைப் போன்ற கதிர்வீச்சை மூளையின் அருகில் நேரடியாகச் செலுத்துவதாகச் சில தகவல்கள் பரவி வருகின்றன.
View this post on Instagram
ஆனால், இது குறித்து விளக்கம் அளித்துள்ள அமெரிக்காவின் மிச்சிகன் நரம்பியல் ஆய்வு நிறுவனத்தின் நிபுணர் டாக்டர் ஜெய் ஜெகநாதன், புளூடூத் கருவிகள் வெளியிடும் அயனியாக்கமற்ற கதிர்வீச்சானது அலைபேசிகளை விட பத்து முதல் நானூறு மடங்கு மிகக் குறைவானது என்று தெரிவித்துள்ளார். எனவே அலைபேசி பயன்பாட்டினால் புற்றுநோய் ஏற்படும் என்று இதுவரை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத நிலையில், அதைவிடக் குறைந்த கதிர்வீச்சு கொண்ட காதொலிக் கருவிகளால் புற்றுநோய் ஏற்படும் என்று கூறுவதற்குப் போதிய ஆதாரம் இல்லை என்று அவர் விளக்கியுள்ளார்.
தேசிய நச்சுயியல் திட்டத்தின் ஆய்வில் எலிகளுக்கு அதிகப்படியான கதிர்வீச்சு செலுத்தப்பட்டபோது ஆண் எலிகளுக்கு மட்டும் இதயத் தசை தொடர்பான பாதிப்புகள் கண்டறியப்பட்டாலும், இது மனிதர்களுக்குப் பொருந்தாது என அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.
மற்றொரு ஆய்வில் புளூடூத் கருவிகளின் நீண்ட காலப் பயன்பாட்டினால் சிலருக்கு புற்றுநோய் அல்லாத தைராய்டு கட்டிகள் உருவாக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டாலும், அவை உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். அறிவியல் ரீதியாகப் பார்க்கும்போது, கம்பியில்லா காதொலிக் கருவிகள் பாதுகாப்பான வரம்பிற்குள்ளேயே செயல்படுகின்றன.
இருப்பினும் தேவையற்ற அச்சத்தைத் தவிர்க்கவும் கதிர்வீச்சைக் குறைக்கவும் நீண்ட நேரம் பயன்படுத்தாத போது இவற்றை அகற்றி வைப்பது நல்லது என்றும், செவித்திறனைப் பாதுகாக்க ஒலி அளவைக் குறைவாக வைத்துப் பயன்படுத்துமாறும் மருத்துவர்கள் ஆலோசனைகளை வழங்குகின்றனர்.
