தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே வளப்பக்குடி பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவரின் மகன் விஷ்ணுகுமார் (23) அரியலூர் மாவட்டம் லால்குடி அருகே குமுழுர் அரசு கல்லூரியில் எம்.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் செல்லப்பன்பேட்டையில் உள்ள தனது பெரியப்பா ஆசைத்தம்பியின் வீட்டிற்கு சென்றிருந்தார்.

அன்று மதியம், ஆசைத்தம்பியும் விஷ்ணுகுமாரும் வயலுக்கு சென்று விட்டு கல்லணை கால்வாய் ஆற்றில் குளிக்கச் சென்றனர். நீரின் வேகம் அதிகமாக இருந்ததால், இருவரும் அதில் இழுத்துச் செல்லப்பட்டனர். அப்போது வயல் வேலைக்கு வந்திருந்த பெண்கள் சேலை உதவியுடன் ஆசைத்தம்பியை மீட்டனர். ஆனால், விஷ்ணுகுமார் நீரில் இழுத்து செல்லப்பட்டார்.

உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விஷ்ணுகுமாரை பல மணி நேரம் தேடினர். இரவு நேரத்தில் வெளிச்சமின்றி தேடுதல் சவாலாகி விட்டதால் தேடலை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.

நேற்று காலை தஞ்சாவூர் காந்திஜி சாலை அருகே விஷ்ணுகுமாரின் உடல் கரையில் கரையொதுங்கியது. கிழக்கு காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். பெரியப்பாவின் கண்முன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.