வாஷிங்டனில் நடைபெற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் இரவு விருந்தில், அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்துகொண்டிருந்தபோது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அமெரிக்காவையே அதிரவைத்துள்ளது.

கலிபோர்னியாவின் டொரன்ஸ் நகரைச் சேர்ந்த 31 வயதான கோல் டோமஸ் ஆலன் (Cole Tomas Allen) என்ற நபர், பல ஆயுதங்களுடன் பாதுகாப்புச் சோதனைச் சாவடியை நோக்கிப் பாய்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரி ஒருவர் மீது குண்டு பாய்ந்தபோதிலும், அவர் கவச உடையால் உயிர் தப்பினார்.

உடனடியாகச் செயல்பட்ட ரகசிய சேவைப் பிரிவினர், துப்பாக்கிதாரியைத் தரையில் சாய்த்துப் பிடித்துக் கைது செய்தனர். இது தொடர்பான புகைப்படங்களைத் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பகிர்ந்துள்ள டிரம்ப், தாக்குதல் நடத்தியவரை ஒரு “மனநோயாளி” என்று சாடியதோடு, தன்னை பாதுகாத்த வீரர்களின் துணிச்சலைப் பாராட்டியுள்ளார்.

“>

துப்பாக்கிச் சூடு நடந்தபோது மண்டபத்தில் இருந்த நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் அச்சத்தில் மேசைகளுக்கு அடியில் பதுங்கியதால் அங்கு பெரும் குழப்பம் நிலவியது. டிரம்ப் உடனடியாகப் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட நிலையில், ஹோட்டலைச் சுற்றி தந்திரோபாயக் குழுக்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டது.

சுமார் 5 முதல் 8 முறை துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவம் காரணமாக ரத்து செய்யப்பட்ட இந்த மெகா விருந்து நிகழ்ச்சி, அடுத்த 30 நாட்களுக்குள் இன்னும் பிரம்மாண்டமாக மீண்டும் நடத்தப்படும் என்று டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.