உத்தர பிரதேசம், கிரேட்டர் நொய்டாவில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த பீகாரைச் சேர்ந்த சிவம் துபே (24) என்ற மாணவர், தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பி.டெக்., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்த அவர், கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். தகவல் கிடைத்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, சம்பவம் குறித்து விசாரணை தொடங்கினர்.

அவரது அறையை சோதனை செய்த போலீசாருக்கு, அவர் இறப்பதற்கு முன் எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. அதில், “இந்தக் கடிதத்தை நீங்கள் படிக்கும் நேரத்தில் நான் உயிருடன் இருக்க மாட்டேன். தற்கொலை செய்வது என் சொந்த முடிவு; யாரையும் குற்றம் சொல்ல வேண்டாம்.

இதற்கான திட்டம் ஒரு வருடமாகவே என் மனதில் இருந்தது. என் உடல் உறுப்புகளை தானமாக வழங்குங்கள். இந்தியா சிறந்த நாடாக வேண்டும் என்றால் கல்வி முறையை மாற்ற வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக வகுப்புகளுக்கு செல்லவில்லை. பெற்றோர் செலுத்திய கல்விக் கட்டணத்தை அவர்களிடம் திருப்பிக் கொடுங்கள்” என்று எழுதியிருந்தார்.

இந்த சம்பவம் குறித்து சிவம் துபேயின் பெற்றோர் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். “எங்கள் மகன் நீண்ட நாட்களாக வகுப்புகளுக்கு செல்லவில்லை என்பதை கல்லூரி நிர்வாகம் எங்களுக்கு தெரியப்படுத்தவில்லை” என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து, இந்த விவகாரத்தை பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மாணவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தற்கொலை குறித்த கடிதம் கல்வி முறையில் உள்ள குறைகளை மீண்டும் வெளிச்சம் போடுவதாக சமூகத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.