கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் ஒரு பெற்றோர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் 2-ம் வகுப்பு படிக்கும் 7 வயது மகன் இருக்கிறார்கள். இதில் சிறுவன் தன் சகோதரியுடன் சண்டை போட்ட நிலையில் அதற்காக சிறுவனை அவருடைய தாயார் கண்டித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த சிறுவன் தன்னுடைய அம்மா மீது போலீசில் புகார் கொடுக்கப் போவதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்று விட்டான். பண்டிகை நேரம் என்பதால் சிறுவன் வெளியே விளையாடிக் கொண்டிருப்பதாக பெற்றோர் நினைத்த நிலையில் சிறுவனுக்கு போலீஸ் ஸ்டேஷன் எங்கே உள்ளது என்று தெரியாததால் கிட்டத்தட்ட வீட்டிலிருந்து 5 கிலோமீட்டர் தூரம் வரை நடந்தே போலீஸ் ஸ்டேஷன் என்று நினைத்து தீயணைப்பு நிலையத்திற்கு சென்றுள்ளான்.

அங்கிருந்தவர்களிடம் என்னை அம்மா வீட்டில் இருந்து வெளியேற்றி விட்டார்கள் என்று புகார் கொடுத்துள்ளான். உடனடியாக அங்கிருந்த அதிகாரிகள் குழந்தை பாதுகாப்பு அமைப்பை தொடர்பு கொண்ட நிலையில் அவர்கள் சிறுவனின் தந்தைக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து பெற்றோர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு சென்றனர். அவர்கள் அங்கிருந்து தங்கள் மகனை பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். மேலும் இது கேட்பதற்கு ஒரு வேடிக்கையான சம்பவமாக இருந்தாலும் சிறுவன் பாதுகாப்பற்ற முறையில் 5 கிலோமீட்டர் தூரம் வரை தனியாக நடந்து சென்றுள்ளான். எனவே பெற்றோர் குழந்தைகளை மிகவும் கவனத்துடனும் அக்கறையுடனும் பார்ப்பது அவசியம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.