குஜராத் மாநிலத்தில் ஆன்மீகம் என்ற பெயரில் ஒரு சிறுவனை வைத்து அரங்கேற்றப்பட்டுள்ள மிகக் கொடூரமான செயல் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பொதுப் பந்தலில், சிறுவன் ஒருவனை “சிகரெட் பாபா” போல அலங்கரித்து அமர வைத்துள்ளனர். அந்தச் சிறுவன் ஒரு சாமியாரைப் போல அமர்ந்து கொண்டு, பகிரங்கமாகச் சிகரெட் புகைப்பதும், அதைச் சுற்றியுள்ள மக்கள் வேடிக்கை பார்ப்பதுமாக அந்த வீடியோ அமைந்துள்ளது.
சிறுவன் சிகரெட் பிடிப்பதைத் தடுத்து நிறுத்தாமல், அங்கிருக்கும் மக்கள் அவருக்குப் பணம் கொடுத்து ஆசி பெறுவதும், வீடியோ எடுப்பதுமாக இருப்பது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. “இது ஆன்மீகம் அல்ல, ஒரு சிறுவனைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் சுரண்டல்” எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பள்ளிக்குச் சென்று விளையாட வேண்டிய வயதில், பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கவும் லாபம் சம்பாதிக்கவும் ஒரு குழந்தையைப் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாக்குவது சமூகத்தின் வீழ்ச்சியையே காட்டுவதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
