பீகார் மாநிலம் நவாடாவில் நடந்த ஒரு அசாதாரண சம்பவம் தற்போது நாடு முழுவதும் வைரலாகி வருகிறது.
ஒரே பள்ளியில் படித்த மூன்று சிறுமிகள் தங்கள் மதிப்பெண் பட்டியலைப் பெறச் சென்றதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறினர். ஆனால், சில நாட்களுக்கு பிறகு அவர்கள் சூரத்துக்குச் சென்று அங்கு ஒன்றாக வாழத் தொடங்கியிருப்பது வெளிச்சத்துக்குவந்தது. அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், அந்த மூவரில் இரண்டு சிறுமிகள் ஒருவரையொருவர் திருமணம் செய்து கொண்டனர். ஒருவர் மணமகனாகவும், ஒருவர் மணமகளாகவும் நடித்தனர். மூன்றாவது சிறுமி தன்னை அவர்களுடைய ‘மைத்துனர்’ என்று கூறிக் கொண்டார்.
ஜூலை 19ஆம் தேதி காணாமல் போன மூன்று சிறுமிகளைத் தேடி குடும்பத்தினர் பல நாட்கள் முயற்சி செய்தும் கண்டுபிடிக்க முடியாமல், ஜூலை 21ஆம் தேதி நெம்தர்கஞ்ச் காவல் நிலையத்தில் காணாமல் போனதாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், மூவரும் குஜராத் மாநிலம் சூரத்தின் படேல் நகரில் உள்ள ஒரு ஜவுளி ஆலையில் வேலை செய்து வருவதாகக் கண்டறிந்தனர்.
சூரத் போலீசாருடன் இணைந்து நடத்திய சோதனையில், மூவரும் மீட்கப்பட்டனர். அப்போது, ஒருவரின் நெற்றியில் சிந்தூரும், மற்றொருவர் கணவரைப் போல ஆடையணிந்திருந்ததும், மூன்றாவது ‘மைத்துனர்’ எனக் கூறிக்கொண்டதும், அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.
இந்த சம்பவம் நவாடா மட்டுமல்ல, பீகார் முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. கிராமத்தினரிடையே இது பரவியதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நெம்தர்கஞ்ச் காவல் நிலைய பொறுப்பாளர் வினய் குமார் கூறுகையில், “இது ஒரு தனித்துவமான மற்றும் அசாதாரண வழக்கு. மூன்று சிறுமிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
தற்போது, இந்த “மணமகன் – மணமகள் – மைத்துனர்” திருமணம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி, வைரல் செய்தியாக மாறியுள்ளது.
