குருகிராமின் மானேசர் பகுதியில் டெலிவரி பணிக்காகக் காத்திருந்த டிங்கு என்ற ஸ்விக்கி ஊழியர் மீது, டாக்டர் நவீன் யாதவ் என்பவர் தனது ஸ்கார்பியோ காரை ஏற்றி கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளின்படி, முதலில் டிங்குவின் மோட்டார் சைக்கிள் மீது மோதிய அந்த கார், சிறிது தூரம் சென்று மீண்டும் பின்னோக்கி வந்து மறுபடியும் மோதியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த டிங்கு, “என்ன செய்கிறீர்கள் அண்ணா?” என்று சத்தமாகக் கேட்டுள்ளார்.

​இதனால் ஆத்திரமடைந்த அந்த டாக்டர், காரைத் திருப்பி நேராக டிங்குவின் மீதே ஏற்றியுள்ளார். இதில் டிங்கு பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரைக் காக்கும் மருத்துவர் ஒருவரே, ஒரு சாமானிய மனிதனின் உயிரைப் பறிக்கும் நோக்கில் காரை ஏற்றிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த டாக்டர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.