மத்தியப் பிரதேசத்தின் ஷியோபூர் மாவட்டத்தில், காதலியைச் சந்திக்கச் சென்ற இளைஞர் ஒருவர், அந்த பெண்ணின் குடும்பத்தினரால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இநத தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள டாபிபுரா என்ற கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஷிவ்புரி மாவட்டம் குரிச்சா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், டாபிபுராவைச் சேர்ந்த தனது காதலியைச் சந்திக்க அவருடைய வீட்டிற்குச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை அறிந்த காதலியின் குடும்பத்தினர், அந்த இளைஞரை பிடித்து, அவரது கைகளை கயிற்றால் கட்டி, தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த தாக்குதல் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, சமூக ஊடகங்களில் பரவியது.

வீடியோவில், அந்த இளைஞர் அழுதுகொண்டு மன்னிப்பு கேட்பதும், “இனிமேல் திரும்பி வரமாட்டேன்” என உறுதி அளிப்பதும் காணப்படுகிறது. இருப்பினும், தாக்குதல் தொடர்ந்தது. சம்பவ இடத்தில் இருந்த சிலர் அவருக்கு உதவுவதற்குப் பதிலாக, தங்கள் மொபைல் போன்களில் வீடியோ பதிவு செய்ததாக தெரிய வருகிறது.

இது குறித்து தகவல் கிடைத்ததும் விஜய்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால் அந்த இளைஞர் ஏற்கனவே அங்கிருந்து வெளியேறிவிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக “மிகவும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று விஜய்பூர் போலீஸ் நிலைய பொறுப்பாளர் ராகேஷ் சர்மா உறுதியளித்தார்.