இந்தூரில் குடும்ப வன்முறை குறித்த புகாரில் தொடர்புடைய ஒரு பெண் பதிவு செய்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, நகரம் முழுவதும் பரபரப்பு நிலவியது.

அந்த வீடியோவில், தனது மாமியார் மற்றும் கணவர் தன்னைத் தாக்க முயன்றதாகவும், குழந்தையுடன் ஒரு அறைக்குள் தன்னைப் பூட்டிக்கொண்டதாகவும் கூறியிருந்தார். மேலும் உதவிக்காக அவர் சமூக ஊடகங்கள் மூலம் அழைப்புவிட்டதைத் தொடர்ந்து, காவல்துறை உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தது.

தகவலின்படி, இந்த சம்பவம் லசுடியா காவல் நிலையம் எல்லைக்குள் நடந்தது. பெண் அதிகாரிகள் உட்பட காவல்துறையினர் உடனடியாக அங்கு சென்று, அந்தப் பெண்ணை பாதுகாப்பாக வெளியேற்றினர்.

ஆனால் விசாரணையில், அந்த வீடியோவில் கூறப்பட்ட தகவல்கள் தவறானவை என்பது தெரியவந்தது. போலீசார் தெரிவித்ததாவது, மாமியார் அல்லது அவரது கணவர் யாரும் சம்பவ இடத்தில் இல்லை; கதவு வெளியில் இருந்து பூட்டப்படவில்லை என்றும் கண்டறியப்பட்டது.

 

பெண் சமீபத்தில் காசியாபாத்திலிருந்து இந்தூருக்கு குடிபெயர்ந்து வந்திருந்தார். அவர் தன்னை அறைக்குள் பூட்டிக் கொண்டு வீடியோவை பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றியதாகவும் கூறப்படுகிறது.

இது அந்தப் பெண்ணும் அவரது கணவரும் இடையே நீண்ட நாட்களாக நீடித்து வரும் குடும்பத் தகராறின் ஒரு பகுதியாக இருந்தது எனவும் போலீசார் தெரிவித்தனர். இது பற்றி கூடுதல் துணை ஆணையர் (குற்றம்) ராஜேஷ் தண்டோதியா கூறியதாவது, “வீடியோ வெளியானவுடன் மகளிர் இன்ஸ்பெக்டர் நீது சிங் தலைமையிலான போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியது. உண்மையில் எந்தத் தாக்குதலும் நடைபெறவில்லை. இருவரும் ஒருவருக்கு ஒருவர் மீதான புகார்களை ஏற்கனவே அளித்திருந்தனர்” எனத் தெரிவித்தார்.

மேலும் தற்போது தம்பதியினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருவதாகவும், சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.