அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணியான மெலனியா டிரம்ப், பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி மறைந்த தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தமக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் தகவல்களைக் கடுமையாக மறுத்துள்ளார். கடந்த சில நாட்களாக இணையதளங்களில் பரவி வரும் இத்தகைய செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்றும், இவை தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில் பரப்பப்படும் அவதூறுகள் என்றும் அவர் சாடியுள்ளார்.
மேலும் எப்ஸ்டீனின் குற்றங்கள் குறித்தோ அல்லது அவருடன் தமக்கு ஏதேனும் தொடர்பு இருப்பது குறித்தோ கூறப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் தானும் தனது வழக்கறிஞர்களும் சட்டரீதியாக எதிர்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து வெள்ளை மாளிகையில் அறிக்கை வெளியிட்ட மெலனியா டிரம்ப், தன்னை எப்ஸ்டீனுடன் தொடர்புபடுத்தும் இழிவான பொய்கள் இத்துடன் முடிவுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்நிலையில் “என்னை பற்றி பொய் சொல்பவர்களிடம் அறநெறி மற்றும் மரியாதை என்பதே இல்லை” என்று குறிப்பிட்ட அவர், இத்தகைய கீழ்த்தரமான முயற்சிகளைத் தான் முற்றிலுமாக நிராகரிப்பதாகத் தெரிவித்தார். மேலும், ஒவ்வொரு பெண்ணும் தனது கதையைப் பொதுவெளியில் சொல்வதற்கான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றும், அப்போதுதான் உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்றும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
