ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் பதற்றமான சூழலில், ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாகத் திறந்து வைப்பதாகவும், அணு ஆயுதங்களை உருவாக்க மாட்டோம் என்றும் அளித்த வாக்குறுதியை ஈரான் மீறினால், “உலகம் இதுவரை பார்த்திராத வகையில்” மிகக் கடுமையான தாக்குதலை அமெரிக்கா நடத்தும் என்று டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனால் துல்லியமான தாக்குதல் நடத்தத் தேவையான நவீன ஆயுதங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், ஒரு நிரந்தரமான ஒப்பந்தம் எட்டப்படும் வரை அமெரிக்க ராணுவம் ஈரானின் எல்லைகளிலிருந்து பின்வாங்காது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மறுபுறம், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்கள் இந்த போர் நிறுத்த உடன்படிக்கையில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தாவிட்டால் தாங்கள் போர் நிறுத்தத்திற்கு ஒத்துழைக்க மாட்டோம் என்று ஈரான் அறிவித்துள்ளதுடன், உலக எரிசக்தி போக்குவரத்தின் முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சூழலில், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் இரு நாட்டு பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்த இருந்த நிலையில், டிரம்பின் இந்த அதிரடி மிரட்டல் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் போர்ப் பதற்றத்தை உச்சக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.