ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு அதிகாரி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம், தமிழக அரசு நிர்வாக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்புத் தாசில்தாராகப் பணிபுரிந்து வந்த விஜி என்பவர், உயர் அதிகாரிகளின் கடும் பணிச்சுமை மற்றும் மன உளைச்சல் காரணமாக விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிகிறது.
மேலும் “என்னை கொன்றுவிடுங்கள் சார்” என அவர் கதறியதாக வெளிவரும் செய்திகள், அரசுப் பணியிடங்களில் நிலவும் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அழுத்தம் எந்த அளவிற்கு ஒரு அதிகாரியை நிலைகுலையச் செய்யும் என்பதற்குச் சாட்சியாக அமைந்துள்ளது.
இந்தச் சம்பவம் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்திற்குப் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. நேர்மையாகப் பணியாற்றும் அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழலும், மேலதிகாரிகளின் தரக்குறைவான விமர்சனங்களும் ஒரு பெண் அதிகாரியை இத்தகைய தீவிர முடிவுக்குத் தள்ளியுள்ளது சமூக ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜியின் நிலையைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
