தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இந்த முறை அதிமுக – பாஜக கூட்டணியில் மிகக் கடுமையான நிபந்தனைகளை முன்வைத்து வருகிறார். “கடந்த முறை ஏமாந்தது போதும், இந்த முறை நான் சாணக்கியனாகச் செயல்படுவேன்” என்று முழங்கும் அவர், 15 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார். குறிப்பாக, பாமக-வின் அன்புமணி ராமதாஸுக்கும் ராஜ்யசபா சீட் உறுதி அளிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியானதால், “என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்களா?” என்ற கோபத்தில் இருக்கிறார் பிரேமலதா.

இதனால்தான் மதுராந்தகம் பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தும், அவரும் சுதீஷும் போனை ‘சுவிட்ச் ஆஃப்’ செய்துவிட்டு சைலண்ட் மோடிற்குச் சென்று கூட்டணியில் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். இன்னொரு பக்கம், தேமுதிக-வை வளைக்க திமுக-வும் தனது ‘மாஸ்டர் பிளான்’ உடன் களமிறங்கியுள்ளது. “அதிமுக கூட்டணியில் 15 சீட் வாங்கி தோற்பதை விட, எங்களுடன் வந்து 4 எம்.எல்.ஏ-க்களை உறுதி செய்து கொள்ளுங்கள்” என்று திமுக தரப்பு ஆசை காட்டி வருகிறது.

தேமுதிக நிர்வாகிகளுக்கோ ஒரு பக்கம் பாஜக-வின் மீது மக்களிடம் இருக்கும் எதிர்ப்பு தங்கள் வாக்குகளைப் பாதிக்குமோ என்ற பயம், மறுபக்கம் திமுக-வா? அதிமுக-வா? என்ற பெரும் குழப்பம் நிலவி வருகிறது. கேப்டன் இல்லாத முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால், கௌரவமான இடங்களைப் பிடிப்பதற்கும், கட்சியின் இருப்பைத் தக்க வைப்பதற்கும் தேமுதிக எடுக்கும் இந்த முடிவுகள் தமிழக அரசியலில் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.