தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இதுவரை இல்லாத வகையில் மிக அதிக எண்ணிக்கையிலான கட்சிகள் கைகோர்த்துள்ளன. அதிமுக, பாஜக என இரு பெரும் துருவங்களுடன் பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட முக்கிய கட்சிகளும் இணைந்துள்ளன. இவை தவிர, புரட்சி பாரதம், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி எனப் பல்வேறு சமூகப் பின்னணி கொண்ட கட்சிகளும் ஒரே குடையின் கீழ் அணிவகுத்து நிற்கின்றன. தென் மாவட்டங்களில் செல்வாக்குள்ள பார்வர்டு பிளாக் கட்சிகளும் இணைந்திருப்பது, இந்தத் தேர்தலை ஒரு பலப்பரீட்சையாக மாற்றியுள்ளது.

​தற்போது வரை 11 கட்சிகள் அதிகாரப்பூர்வமாகத் தங்களது இணைப்பை உறுதி செய்திருந்தாலும், இன்னும் சில முக்கியக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல்கள் கசிகின்றன. “வெற்றி ஒன்றே இலக்கு” எனப் பயணிக்கும் இந்த மெகா கூட்டணி, தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு என அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகரத் தயாராகி வருகிறது. எதிர்க்கட்சிகளின் வியூகங்களை முறியடிக்க இத்தனை கட்சிகள் ஒன்றாக இணைந்திருப்பது, வரும் தேர்தலில் ஒரு மிகப்பெரிய வாக்கு வங்கி மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கணித்து வருகின்றனர்.