உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், நவீன உடைகள் அணிவது தொடர்பான தகராறில் கர்ப்பிணி மனைவியைக் கணவன் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, அவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட கொடூரச் சம்பவம் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கோரக்பூரின் முக்கரிபூர் கிராமத்தைச் சேர்ந்த ஷதாப் மற்றும் மும்பையில் வளர்ந்த நிகத் நிஷா ஆகிய இருவருக்கும் கடந்த 2025 நவம்பரில் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகு கிராமத்தில் வசித்து வந்த நிகத்தின் நவீன வாழ்க்கை முறை மற்றும் உடைகள் தொடர்பாக தம்பதியினருக்கு இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளன.

ஆரம்பத்தில் இது இரட்டைத் தற்கொலை என்று கருதப்பட்ட நிலையில், போலீஸாரின் தீவிர விசாரணையில் உண்மை அம்பலமாகியுள்ளது.

அவர்களது மொபைல் போன்களில் இருந்த வாட்ஸ்அப் செய்திகளை போலீஸார் ஆய்வு செய்தபோது, தம்பதியினரிடையே இருந்த நீண்டகால மனக்கசப்பு தெரியவந்தது.

தன்னை வெளியே அழைத்துச் செல்வதில்லை என்று நிகத் புகார் கூறியதும், அதற்கு ஷதாப் தங்கள் சமூகத்தில் உள்ள பெண்கள் இது போன்ற ஆடைகளை அணிவதில்லை என்றும், வீட்டில் கால்சட்டைகள் மற்றும் டி-ஷர்ட் அணிவதை நிறுத்த வேண்டும் என்றும் வற்புறுத்தியது தெரியவந்தது.

இந்தத் தகராறு மற்றும் வேலையின்மை காரணமாக ஏற்பட்ட விரக்தியில், ஷதாப் தனது கர்ப்பிணி மனைவியைக் கொலை செய்துவிட்டுத் தானும் மின்விசிறியில் தூக்கில் தொங்கியுள்ளார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.