அமெரிக்காவின் வரிக் கொள்கைகள் மற்றும் வரி உயர்வு காரணமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி என் மீது மகிழ்ச்சியாக இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தச் சூழலில், இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்தது. இதனை இந்தியா கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்கக் குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய அதிபர் ட்ரம்ப், இந்தியாவுடனான வர்த்தக உறவு குறித்து விரிவாகப் பேசினார். அவர் கூறியதாவது: எனக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே மிகச் சிறந்த நட்பு உள்ளது. அவர் ஒரு சிறந்த மனிதர். ஆனால், அமெரிக்கா விதித்துள்ள வரிக் கொள்கைகளால் அவர் என் மீது தற்போது மகிழ்ச்சியாக இல்லை. வரி விதிப்புகள் காரணமாக அவர் வருத்தத்தில் இருக்கிறார் என்பது எனக்குத் தெரியும்.

ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நான் விரும்பவில்லை. இப்போது இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதைக் கணிசமாகக் குறைத்துள்ளது. இது ஒரு முன்னேற்றம். தொடர்ந்து பேசிய ட்ரம்ப், அமெரிக்காவின் பொருளாதார வலிமை குறித்துக் குறிப்பிடுகையில்:

“அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கைகள் காரணமாக நாம் முன்பை விட அதிகப் பணக்காரர்களாகி வருகிறோம். இந்த வரி விதிப்புகளால் அமெரிக்கா பொருளாதார ரீதியாகவும், தேசிய பாதுகாப்பு ரீதியாகவும் மிக வலிமையான நாடாக உருவெடுத்துள்ளது. உலக அரங்கில் அமெரிக்காவிற்கான மரியாதை அதிகரித்துள்ளது. இதை அனைவரும் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்.”

முன்னதாக, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது தொடர்பாக இந்தியா மீதான வரியை மேலும் உயர்த்த என்னால் முடியும் என்றும், தான் மகிழ்ச்சியாக இல்லை என்பது பிரதமர் மோடிக்குத் தெரியும் என்றும் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் து இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் நிலவி வரும் சூழலில், ட்ரம்பின் இந்தப் பேச்சு சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.