தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்குப்பதிவு 85.15% என்ற வரலாற்றுச் சாதனயுடன் முடிவடைந்துள்ள நிலையில், அரசியல் களம் இப்போது மே 4-ஆம் தேதி வெளியாகப்போகும் தேர்தல் முடிவுகளை நோக்கித் தவம் கிடக்கிறது.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தேர்தல் முடிவுகள் வெளியாகும் அதே மே 4-ஆம் தேதியன்று ஆஸ்திரேலியாவிற்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் கோலிவுட் முதல் கோட்டை வரை பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

வழக்கமாகத் தனது படப்பிடிப்புகள் முடிந்ததும் வெளிநாடு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள விஜய், இந்த முறை தனது முதல் அரசியல் போர்க்களத்தின் முடிவுகள் வரும் நாளில் ஏன் ஆஸ்திரேலியா செல்கிறார் என்பதுதான் தற்போதைய ஹாட் டாபிக். இதற்காக அவர் ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்திருப்பதாகவும் ஒரு தரப்பு கூறி வருகிறது.

இருப்பினும், விஜய்யின் இந்த ஆஸ்திரேலிய பயணம் முழுக்க முழுக்க தேர்தல் முடிவுகளைப் பொறுத்தே அமையப்போவதாகத் தெரிகிறது. தவெக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டால் விஜய் தனது பயணத்தைத் ரத்து செய்துவிட்டுத் தமிழகத்திலேயே தங்குவார் என்றும், ஒருவேளை தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தபடி அமையாவிட்டால் ரிலாக்ஸ் செய்வதற்காக ஆஸ்திரேலியா பறந்துவிடுவார் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

ஏற்கனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானலுக்கும், உதயநிதி ஸ்டாலின் குடும்பத்துடன் வெளிநாட்டிற்கும் ரிலாக்ஸ் செய்யச் சென்றுவிட்ட நிலையில், விஜய்யின் இந்த ‘ஆஸ்திரேலியா பிளான்’ அவரது அரசியல் எதிர்காலத் திட்டத்தின் ஒரு பகுதியா அல்லது வெறும் ஓய்வா என்பதை மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் தான் தீர்மானிக்கும்.