தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது பழைய வீட்டை இடிக்கத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் அவருக்கு மிகவும் ராசியானதாகக் கருதப்பட்ட இந்த வீட்டில், ஒரு காலத்தில் இசைக்கலைஞர் விஜய் ஆண்டனி ஸ்டுடியோ நடத்தி வந்தார்.

மேலும், விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இந்த வீட்டைத் தனது அலுவலகமாகப் பயன்படுத்தி வந்ததோடு, அங்கிருந்து பலருக்குத் தொடர்ச்சியாக அன்னதானமும் வழங்கி வந்தார். தற்போது அந்தப் பழைய வீட்டை இடித்துவிட்டு, அந்த இடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பைக் கட்ட விஜய் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் சமீபத்தில் சென்னை அண்ணா நகரில் உள்ள தனது வீட்டை சுமார் 35 கோடி ரூபாய்க்கு விஜய் விற்பனை செய்திருந்த நிலையில், தற்போது சாலிகிராமம் வீட்டை இடிக்கவிருக்கும் செய்தி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே இந்த இடிப்புப் பணிகள் தொடங்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

இது ஒருபுறம் இருக்க, விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் விவாகரத்து தொடர்பான வதந்திகள் பரவி வரும் சூழலில், அவர் தனது சொத்துக்களை நிர்வகிக்கும் விதம் குறித்துப் பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளன. இருப்பினும், காலத்திற்கேற்ப பழைய கட்டிடத்தை மாற்றி புதிய கட்டுமானம் மேற்கொள்வது ஒரு சாதாரண விஷயம் தான் என்று மற்றொரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.