பஞ்சாப் மாநிலம் முல்லன்பூரில் உள்ள மைதானத்தில் ஐபிஎல் போட்டியைக் காண வந்த பெண் ஒருவர், சமூக வலைதளத்திற்காக வீடியோ எடுத்தபோது தனது விலையுயர்ந்த மோதிரத்தை பறிகொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மைதானத்தில் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, ஒரு பெண் தனது செல்போனில் ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். வீடியோவிற்காக கைகளை உயர்த்தி அவர் போஸ் கொடுத்தபோது, எதிர்பாராதவிதமாக அவரது விரலில் இருந்த வைர மோதிரம் கழன்று கீழே விழுந்தது. அந்த மோதிரத்தின் மதிப்பு சுமார் ரூ.70,000 இருக்கும் எனக் கூறப்படுகிறது. மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததாலும், போதிய வெளிச்சமின்மையாலும் மோதிரம் எங்கே விழுந்தது என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் அந்தப் பெண் தவித்தார்.
View this post on Instagram
யாராவது இந்த மோதிரத்தைக் கண்டெடுத்தால் தயவுசெய்து என்னிடம் ஒப்படைக்கவும் என அந்தப் பெண் வீடியோ வாயிலாக உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது ‘நஷ்டம் ஏற்பட்டுவிட்டது’ என்ற தலைப்பில் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கலவையான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளப் புகழுக்காகச் பொது இடங்களில் இவ்வளவு விலையுயர்ந்த பொருட்களைச் சரியாகக் கையாள வேண்டாமா? எனச் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ரீல்ஸ் எடுக்கும் ஆர்வத்தில் ரூ.70 ஆயிரத்தை இழந்தது மிகப்பெரிய பாடம் என்று சிலர் கிண்டலாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் எது எப்படியோ, பொது இடங்களில் மக்கள் தங்கள் உடைமைகளை கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
