ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற போதிலும், தனது அணியின் செயல்பாடுகள் குறித்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் கேப்டன் இஷான் கிஷன் அதிருப்தி வெளியிட்டுள்ளார். போட்டிக்குப் பிந்தைய பேட்டியில் இஷான் கிஷன் கூறியதாவது, “ஒரு கேப்டனாக, அணியினரிடையே தகவல் பரிமாற்றத்தில் சில குறைபாடுகள் இருப்பதை உணர்கிறேன். விக்கெட் கீப்பிங் செய்துகொண்டே பந்துவீச்சாளர்களுடன் திட்டங்களைப் பற்றி விவாதிப்பதில் நேரமின்மை ஒரு தடையாக இருக்கிறது. பந்துவீச்சாளர்களுக்கு என்ன தேவை என்பதைச் சரியாகச் சொல்ல முடிவதில்லை.

பந்துவீச்சாளர்களுடன் நெருக்கமாக இருந்து பேசினால் மட்டுமே சரியான ஃபீல்டிங் வியூகங்களை அமைக்க முடியும் என்று இஷான் கிஷன் கருதுகிறார். அவர்களுடன் களத்தில் இருந்து ஆலோசிப்பதன் மூலம் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்த முடிகிறது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்த முயற்சி பலன் தந்தது. வரும் போட்டிகளிலும் இதையே தொடர வாய்ப்புள்ளது என அவர் தெரிவித்தார்.

தொடக்க வீரர்கள் சோபிக்கத் தவறியது குறித்துப் பேசிய அவர் எங்கள் அணியின் பேட்டிங் பலத்தின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் 200 ரன்களுக்கு மேல் குவித்து வருகிறோம். அபிஷேக் சர்மா விரைவில் ஆட்டமிழந்தாலும், அவருக்கு நாங்கள் முழு சுதந்திரம் அளித்துள்ளோம். அவர் நிலைத்து நின்று ஆடினால் 260 அல்லது 270 ரன்கள் வரை ஸ்கோரை உயர்த்தக்கூடிய வல்லமை படைத்தவர். அடுத்த போட்டியில் அவர் இன்னும் உத்வேகத்துடன் விளையாடுவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ராஜஸ்தானை வீழ்த்திய தெம்பில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, தனது அடுத்த லீக் ஆட்டத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியை எதிர்கொள்கிறது. இதற்கிடையே, ராஜஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் சூர்யவன்ஷி, அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.