ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக அறிமுகமான இளம் வீரர் பிரஃபுல் ஹிங்கே, தனது முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி கிரிக்கெட் உலகையே தன் பக்கம் திருப்பியுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் ரூ.30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட பிரஃபுல் ஹிங்கே, ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார். போட்டியின் முதல் ஓவரை வீசும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த ஓவரிலேயே 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி ஐதராபாத் அணியின் வெற்றிக்கு வலுவான அடித்தளமிட்டார். ஒட்டுமொத்தமாக இந்தப் போட்டியில் அவர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். எனது முதல் போட்டியிலேயே 4 முதல் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவேன்என்று அவர் ஏற்கனவே எழுதி வைத்திருந்த இலக்கை, தனது உழைப்பால் நிஜமாக்கிக் காட்டியுள்ளார்.
ராஜஸ்தான் அணியின் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷி, பிரஃபுல் வீசிய பந்தை எதிர்கொண்ட போது, அது உயரே எழும்பி விக்கெட் கீப்பரிடம் தஞ்சமடைந்தது. ஃபார்மில் இருந்த சூர்யவன்ஷியை முதல் பந்திலேயே அவுட் செய்து அதிர்ச்சியளித்தார் பிரஃபுல். அதைத் தொடர்ந்து அதே ஓவரின் 4-வது பந்தில் துருவ் ஜூரலை ‘கிளீன் போல்ட்’ செய்தார். ஓவரின் கடைசி பந்தில் லுஹான் டி பிரிட்டோரியஸையும் அவுட் செய்து, ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளைச் சாய்த்து சாதனை படைத்தார். மற்றொரு அறிமுக வீரரான சாகிப் உசைனும் தன் பங்கிற்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
பிரஃபுல் ஹிங்கே விளையாடுவதை அவரது பெற்றோர் வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர் முதல் விக்கெட்டை எடுத்தவுடன், அவரது தந்தை உற்சாக மிகுதியில் அருகில் இருந்தவரை கட்டிப்பிடித்துக் கொண்டார்.
அவரது தாய், ஒரு சிறு குழந்தையைப் போல துள்ளிக் குதித்து, கைகளைத் தட்டி தனது மகனின் வெற்றியை ஆனந்தக் கண்ணீருடன் கொண்டாடினார். தனது முதல் ஆட்டநாயகன் விருதை தனது பெற்றோர் மற்றும் பயிற்சியாளருக்கு பிரஃபுல் சமர்ப்பித்துள்ளார். சமூக வலைதளங்களில் பிரஃபுல் ஹிங்கேயின் பெற்றோர் கொண்டாடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
View this post on Instagram
View this post on Instagram
