இந்தியாவில் ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் வேளையில், சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான டி20 தொடர் வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி தொடங்க உள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடருக்கான 15 பேர் கொண்ட தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று (ஏப்ரல் 13) அறிவித்தது.
தென் ஆப்பிரிக்க அணியை நட்சத்திர வீராங்கனை லாரா வோல்வார்ட் வழிநடத்த உள்ளார். காயம் காரணமாக நியூசிலாந்து தொடரில் பங்கேற்காத முன்னாள் கேப்டன் டேன் வான் நீகெர்க், இன்னும் முழுமையாக குணமடையாததால் இந்தத் தொடரிலிருந்தும் விலகியுள்ளார். இது அந்த அணிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
அதேசமயம், இந்திய அணியைப் பொறுத்தவரை ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் வீராங்கனைகள் களம் காண உள்ளனர். இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 27 வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த அணியில்,
லாரா வோல்வார்ட் (கேப்டன்), அனெக் போஷ், டாஸ்மின் பிரிட்ஸ், நாடின் டி கிளர்க், அனெரி டெர்க்சன், அயண்டா ஹலுபி, சினாலோ ஜாஃப்டா, அயபோங்கா காகா, சுனே லூஸ், டெபோகோ மாச்சேகே, எலிஸ்-மேரி மார்க்ஸ், நோன்குலுலேகோ மிலாபா, கைலா ரெனிகே, துமி செகுஹுனே மற்றும் சோலி ட்ரையான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
