ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு பிறகு, இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் பதிவிட்ட கருத்து பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அதாவது இர்ஃபான் பதான் அண்மையில் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். அதில், “வைபவ் சூர்யவன்ஷி பெரிய பெயர் கொண்ட பந்துவீச்சாளர்களை மட்டுமே குறிவைத்துத் தாக்குகிறார்” என்று ஒரு கோட்பாட்டை குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய சூர்யவன்ஷி, அறிமுக வீரரான பிரஃபுல் ஹிங்கேயின் பந்துவீச்சில் ‘கோல்டன் டக்’ (முதல் பந்திலேயே அவுட்) ஆகி வெளியேறினார். இதைப் பார்த்த இர்ஃபான் பதான், தனது எக்ஸ் (X) தளத்தில், “சூர்யவன்ஷி குறித்த எனது தியரி தவறில்லை போலிருக்கிறது” என்று பதிவிட்டு கிண்டல் செய்தார். பதானின் இந்தப் பதிவு சூர்யவன்ஷியின் ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இளம் வீரரின் வளர்ச்சியைக் கண்டு இர்ஃபான் பதான் பொறாமைப்படுகிறார்” என்று ஒரு தரப்பினர் சாடி வருகின்றனர்.

சூர்யவன்ஷி பந்துவீச்சாளரின் பெயரைக் கண்டு ஆடுவதில்லை, ரன் சேர்க்க வேண்டும் என்ற வேகத்தில் தான் ஆடுகிறார் என்று ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் இர்ஃபான் பதானை ரசிகர்கள் மிகக் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

மேலும் விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும், சூர்யவன்ஷி விரைவில் இந்திய அணியில் அறிமுகமாவார் என்பதில் சந்தேகமில்லை. ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் நடைபெறவுள்ள அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்காக, பிசிசிஐ (BCCI) ஏற்கனவே சூர்யவன்ஷியின் பெயரைப் பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.