ஸ்பெயின்  வடக்குப் பகுதியில் உள்ள அடபுவர்கா பகுதியில், கிரான் டோலினா குகையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வு நடவடிக்கையில், 8.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஹோமோ ஆன்டிசெசர் இனத்தவர்கள் குழந்தையை உணவாக உட்கொண்டதற்கான அதிர்ச்சிகரமான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.

இந்த விஞ்ஞான ஆய்வை காடலான் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹ்யூமன் பேலியோஎகாலஜி அண்ட் சோஷியல் எவல்யூஷன் (IPHES) நடத்தியுள்ளது. குழந்தையின் கழுத்து எலும்பில் தெளிவான வெட்டு குறிகள் இருந்ததால், அந்தக் குழந்தை 2 முதல் 4 வயதுக்கு இடையில் இருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது.

இந்த வெட்டு குறிகள், அந்தக் காலத்தில் வேட்டையாடப்பட்ட மிருகங்களை பதப்படுத்தும் முறையை ஒத்ததாயிருந்தது. இதனால்தான் குழந்தை உணவாக உட்கொள்ளப்பட்டிருக்க வாய்ப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

டாக்டர் பால்மிரா சலாடி கூறுகையில், “வெட்டுக்குறிகள் மிகவும் துல்லியமானவை. இது வெறும் உயிரிழப்பு அல்ல; உணவுக்காகக் கொல்லப்பட்டதற்கு நேரடியான சான்று” என்று தெரிவித்தார்.  ஹோமோ ஆன்டிசெசர் இனத்தவர்கள் ஹோமோ சேபியன்ஸும், நியாண்டர்டாலும் தோன்றும் முன்னர் வாழ்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர்.

இவர்களின் உடல் அமைப்பு உறுதியாகவும், மூளையின் அளவு சுமார் 1,000 முதல் 1,150 கன சென்டிமீட்டராக இருந்தது. உணவுக்காக போராடும் சூழலில், பலவீனமானவர்கள் கூட உணவாகக் கருதப்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்த கண்டுபிடிப்பு, மனித இனத்தின் சமூக அமைப்பு, உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் பரிணாம வளர்ச்சி பற்றிய புதிய கேள்விகளை எழுப்புகிறது. மனிதனும் மற்ற உயிரினங்களும் இடையிலான எல்லை நுணுக்கமானதாக இருந்திருக்கலாம்.

குழந்தையை உணவாக மாற்றும் இந்த அதிர்ச்சிகரமான நிகழ்வு, நமது மூதாதையர்களின் வாழ்க்கை முறை எவ்வளவு கடினமானதாக இருந்தது என்பதையும் உணர்த்துகிறது. எதிர்கால ஆய்வுகளில் இத்தகைய சான்றுகள் மனித பரிணாமத்தின் மர்மங்களை தெளிவுபடுத்தும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.