அமெரிக்க அதிபர் டிரம்ப் சனிக்கிழமை இரவு கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையேயான மோதல்களில் போர் நிறுத்தத்தை அறிவித்தும், இரு நாடுகளுக்கிடையேயான சண்டை தொடர்கிறது. கடந்த நான்கு நாட்களில் நடந்த தொடர்ச்சியான தாக்குதல்களில் குறைந்தது 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுமார் 2 லட்சம் பேர் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பிற்காக வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஞாயிற்றுக்கிழமையும் இரு நாடுகளுக்கிடையே துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவீச்சு நடவடிக்கைகள் நடந்தன.
அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் மற்றும் சீனா போன்ற நாடுகள் இரு தரப்புக்கும் அமைதி அழைப்பு விடுத்தாலும், போர்வெறி குறையவே இல்லை. தாய்லாந்து அரசு, “கம்போடியா மனிதாபிமான சட்டங்களை மீறி பொதுமக்கள் பகுதிகளுக்கு ஷெல் தாக்குதல் நடத்துகிறது” என குற்றம் சாட்டி, தாங்கள் இன்னும் இராணுவ நடவடிக்கையை நிறுத்த தயாராக இல்லை என்று கூறியுள்ளது. தாய்லாந்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “கம்போடியா தொடர்ந்து மனித உரிமைகளை மீறுகிறது, எனவே அமைதி ஏற்பட முடியாது” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பழங்கால கோயிலுக்கு அருகே தாக்குதல்:
கம்போடியா வடக்கே உள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான பிரியா விஹார் கோயில் அருகே ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கோயிலுக்கருகே விழுந்த குண்டுகள் மீண்டும் இரு நாடுகளுக்கிடையேயான உரிமை மோதலைத் தூண்டியுள்ளது. இது கடந்த காலங்களிலும் பல மோதல்களுக்கு காரணமாக இருந்தது. தற்போது கம்போடியா, தாய்லாந்தின் “வேண்டுமென்ற ஆக்கிரமிப்பு முயற்சி” எனக் கண்டனம் தெரிவித்துள்ளது.
போர் நிறுத்த அறிவிப்பு வெளியான பிறகும் தொடரும் சண்டை உலக நாடுகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இடம்பெயர்ந்தோர் முகாம்களில் அடிப்படை வசதிகள் இல்லாததால், அங்கு மனிதாபிமான நெருக்கடி உருவாகி வருகிறது. உணவு, தண்ணீர், மருத்துவம் உள்ளிட்ட தேவைகள் பெரிதும் எழுந்துள்ள நிலையில், உடனடியாக நிலைமை கட்டுப்படுத்தப்படவேண்டும் என உச்சநிலை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
