தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து நடிகர்கள் சத்யராஜ் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆதரித்து நடிகர் சத்யராஜ் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது,
“விஜய்க்கு கூடும் கூட்டமெல்லாம் வாக்குகளாக மாறும் என்று சொல்ல முடியாது. சினிமாவில் குறைந்த சம்பளம் வாங்கும் என்னையே மக்கள் எளிதில் சந்தித்து குறைகளைச் சொல்ல முடியாத சூழல் உள்ளது. அப்படியிருக்கையில், கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் விஜய்யை மக்கள் எப்படி எளிதாகச் சந்திக்க முடியும்?
விஜய்யின் அடுத்த படத்திற்காக நான் காத்திருக்கிறேன். அவரைத் தேர்தலில் தோற்கடித்து மீண்டும் சினிமாவுக்கே அனுப்ப வேண்டும். அவர் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்,” என சத்யராஜ் தெரிவித்தார்.
எனக்கு விஜய் படம் பாக்காம தூக்கம் வராது; விஜயை மறுபடி சினிமாவில் நடிக்க அனுப்ப வேண்டும் –
பெரம்பூர் திமுக வேட்பாளரை ஆதரித்து நடிகர் சத்யராஜ் பரப்புரை #sathyaraj #TVK #Vijay #News18Taminadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/MOBYJUypgd— News18 Tamil Nadu (@News18TamilNadu) April 19, 2026
இதேபோல் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பழனிவேல் தியாகராஜனை ஆதரித்துப் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், விஜய்யின் அரசியல் தகுதியை கேள்வி எழுப்பினார். மக்கள் பணியில் ஈடுபட விஜய்க்கு என்ன வரலாறு இருக்கிறது? அவர் ஒரு சிறந்த நடிகர். அவர் ஆஸ்கர் விருது வாங்கினால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். அவர் திரையில் நடித்துக் கொண்டிருந்தால் நான் அவருக்கு விசிலடிப்பேன். ஆனால், மக்கள் பணி என்பது வேறு என்று அவர் குறிப்பிட்டார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வரும் செவ்வாய்க்கிழமை மாலையுடன் பரப்புரை நிறைவடைகிறது. இதையொட்டி பிரதமர் மோடி, அமித் ஷா, ராகுல் காந்தி உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் தமிழகத்தில் முகாமிட்டுள்ள நிலையில், திரைத்துறையினரின் இந்த மோதல் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
