தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோரிடையே நிலவி வரும் கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து விவகாரம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த மனு நாளை விசாரணைக்கு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இரு தரப்பினரும் பரஸ்பரம் பிரிந்து செல்வது குறித்து நேற்று சென்னையில் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிகிறது.
மும்பையிலிருந்து வந்த இரு தரப்பிற்கும் நெருக்கமான ஒருவர் முன்னிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், விவாகரத்து பெறுவதற்காக சங்கீதா தரப்பில் சுமார் 250 கோடி ரூபாய் செட்டில்மெண்ட் கோரப்பட்டதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் சட்டமன்றத் தேர்தலுக்காக விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து பட்டியலின் அடிப்படையில், தனக்கும் தனது மகன் மற்றும் மகளுக்கும் சேர்த்து இந்தத் தொகையைச் சங்கீதா தரப்பு கோரியுள்ளதாகத் தெரிகிறது.
இருப்பினும், இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில், மனைவி சங்கீதாவிற்கு மட்டும் சுமார் 35 கோடி ரூபாய் வழங்க விஜய் ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தனது மகன் மற்றும் மகளின் எதிர்காலப் பொறுப்புகளைத் தானே ஏற்றுக்கொள்வதாகவும் அவர் உறுதியளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஒரு புதிய கட்சியின் தலைவராக உருவெடுத்துள்ள விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த இந்தத் தகவல்கள் அரசியல் வட்டாரத்திலும், சினிமா துறையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மேலும் நாளை நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது இது குறித்த கூடுதல் விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
