உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் போது, மாணவர் ஒருவர் விடைத்தாளில் எழுதியுள்ள உருக்கமான வேண்டுகோள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த மாணவர் தனது விடைத்தாளில், “ஐயா, எனக்குத் தாயும் இல்லை, தந்தையும் இல்லை. நீங்களே எனக்குத் தாய், தந்தை போன்றவர். தயவுசெய்து என்னை தேர்வில் தேர்ச்சி பெறச் செய்யுங்கள் ஐயா,” என்று மிகவும் உருக்கமாக எழுதியுள்ளார்.
மேலும் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தெரியாத நிலையில், தேர்ச்சி பெற வேண்டும் என்ற ஆவலில் அந்த மாணவர் தனது வறுமை மற்றும் தனிமை நிலையை ஆசிரியரிடம் வெளிப்படுத்தியுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் உத்தரப்பிரதேசத்தில் இது முதல்முறை அல்ல; பல மாணவர்கள் தங்கள் விடைத்தாள்களில் பணத்தை வைத்து அனுப்புவது அல்லது உணர்ச்சிகரமான கதைகளை எழுதி ஆசிரியர்களைக் கவர முயற்சிப்பது தொடர்கதையாகி வருகிறது.
இதனால் சில மாணவர்கள், “நான் தேர்ச்சி பெறவில்லை என்றால் என் திருமணம் நின்றுவிடும்” அல்லது “குடும்ப பாரம் என் தலையில் உள்ளது” என்பது போன்ற காரணங்களை எழுதி தேர்ச்சி மதிப்பெண் கேட்கின்றனர். ஆனால், இந்த மாணவரின் பதிவு, அவரது ஏழ்மை நிலையையும் ஆதரவற்ற சூழலையும் சுட்டிக்காட்டுவதாக அமைந்திருப்பது பார்ப்போரின் மனதை நெகிழச் செய்துள்ளது. இருப்பினும், விடைத்தாள்களில் முறையற்ற இதுபோன்ற கோரிக்கைகளை வைப்பது விதிமுறைப்படி தவறு என கல்வித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
