கால்நடைகளுக்குத் தீவனம் சேகரிக்கச் சென்ற 60 வயது விதவை மூதாட்டி, நகைக்காகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, பண்ணை வீட்டில் புதைக்கப்பட்ட சம்பவம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 4.40 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க மற்றும் வெள்ளி நகைகளைக் கொள்ளையடிக்க இந்தத் துணிகரக் கொலை அரங்கேறியுள்ளது.

குஜராத் மாநிலம் இந்த்ராத் கிராமத்தைச் சேர்ந்தவர் சாரதாபென் தாகூர் (60). இவர் கடந்த மார்ச் 20-ஆம் தேதி காலை தனது கால்நடைகளுக்குத் தீவனம் (புல்) சேகரிப்பதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றார். மாலை நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது மகன் கோவிந்த்ஜி பல்தேவ்ஜி தாகூர், உறவினர்களுடன் இணைந்து தேடினார். எங்குத் தேடியும் கிடைக்காத நிலையில், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், சாரதாபென் ‘சவிதா பார்ம்’ (Savita Farm) எனப்படும் பண்ணை வீட்டை நோக்கிச் செல்வது பதிவாகியிருந்தது. ஆனால், அவர் அந்தப் பண்ணையை விட்டு வெளியே வரும் காட்சிகள் பதிவாகவில்லை. இது போலீசாருக்குப் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.

அந்தப் பண்ணை வீட்டில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அங்குள்ள எலுமிச்சைத் தோட்டத்தில் ஒரு இடத்தில் மண் புதிதாகத் தோண்டப்பட்டு மூடப்பட்டிருப்பதை போலீசார் கவனித்தனர். அந்த இடத்தை ஒரு அடி ஆழத்திற்குத் தோண்டிய போது, சாரதாபென்னின் உடல் மீட்கப்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள்

=மூதாட்டியின் தலையின் பின்புறம் பலமான ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளது.

கொள்ளை: அவர் அணிந்திருந்த தங்க வளையல்கள், கம்மல்கள் மற்றும் வெள்ளி கொலுசுகள் என மொத்தம் 4.40 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் பறிக்கப்பட்டுள்ளன.

ஆதாரங்கள் அழிப்பு: கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கோடாரி மற்றும் அரிவாள் ஆகியவற்றை அருகிலேயே புதைத்து வைத்து கொலையாளிகள் தப்பியோடியுள்ளனர்.

தற்போது ‘சவிதா பார்ம்’ பண்ணைக்கு வந்து சென்ற நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம நபர்கள் மீது கொலை மற்றும் கொள்ளை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என மெக்சானா போலீசார் தெரிவித்துள்ளனர்.