இந்தியா கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் இணைவது குறித்து முதலமைச்சர் விஜய் உரிய நேரத்தில் நல்ல முடிவை எடுப்பார்” என்று நிதி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முதலமைச்சர் விஜய் எதற்கெடுத்தாலும் பத்திரிகையாளர்களைச் சந்திக்க வேண்டிய அவசியமில்லை, அவருடைய மக்கள் நலச் செயல்பாடுகளே அதற்குப் போதிய சான்றாக விளங்கும்” என்று எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தார்.
மேலும், தமிழ்நாட்டில் சிறந்த, வெளிப்படையான ஆட்சியைத் தருவதற்காகத் தற்போது துறை வாரியாகத் தீவிர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்குச் சாதிச் சான்றிதழ்கள் எவ்விதத் தாமதமும் இன்றி விரைந்து கிடைப்பது தொடர்பாக இன்று அதிகாரிகளுடன் முக்கிய ஆய்வு நடத்த உள்ளதாகவும் உறுதிபடக் கூறினார்.
