தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையிலான புதிய அரசு அமைந்து இன்னும் 3 மாதங்களில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானவை என்றும், அவரது பேச்சு திட்டமிட்டு திரிக்கப்பட்டுள்ளதாகவும் திமுக மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில், “புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசை 6 மாத காலத்திற்கு நாங்கள் விமர்சிக்க மாட்டோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருந்ததை மட்டுமே சில ஊடகங்கள் தவறாகப் புரிந்து கொண்டு, ‘3 மாதத்தில் ஆட்சி கவிழ்ந்துவிடும்’ என்று சொன்னதாகத் திரித்து செய்திகளைப் பரப்பி வருகின்றன.

மக்கள் தீர்ப்பை மதிக்கும் திமுகவுக்கு, பிற்போக்குத்தனமாக மற்றவர்களின் ஆட்சியை கலைப்பதோ அல்லது கவிழ்ப்பதோ எப்போதும் எங்களுடைய அரசியல் நிலைப்பாடு அல்ல” என்று தங்கம் தென்னரசு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.