அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்கள் சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்று சேர்க்க வேண்டும் எனவும் 10 நாட்களுக்குள் இதனை அவர் செய்யாவிடில் அந்த பணிகளை நானே செய்வேன் எனவும் கூறினார். இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி என்று அவரை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார்.
இதற்கு தற்போது ஓ பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்தவருமான ஓ. பன்னீர் செல்வம் இன்று தேனியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அதிமுக பல அணிகளாக உடைந்ததிலிருந்து தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. இந்த நிலைமையிலிருந்து மீள்வதற்கான ஒரே வழி — அதிமுக மீண்டும் ஒருங்கிணையவேண்டும் என்பதே, தொண்டர்களின் மனநிலையும், மக்களின் எதிர்பார்ப்பும் ஆகும்.
அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையனை கட்சி பொறுப்பிலிருந்து நீக்கிய நடவடிக்கை, பழனிசாமியின் சர்வாதிகாரச் செயலாகும். இது முற்றிலும் அதிர்ச்சி அளிக்கக்கூடியது.
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது. கட்சியின் கட்டுப்பாட்டை மீறி நடந்தவர்களுக்கு எதிராகத்தான் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்திருக்கிறார். ஆனால், அதிமுக ஒன்றிணைய வேண்டும் என கருத்து தெரிவித்தவர்களுக்கு எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் ஒருபோதும் எதிராக நடவடிக்கை எடுத்து இருப்பதில்லை.
அதிமுக ஒற்றுமைக்காக திரு. செங்கோட்டையன் மேற்கொண்ட முயற்சி வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள்.” இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
