ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாஜகவில் அண்ணாமலைக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததற்குக் காரணம், நயினார் நாகேந்திரன் அதிமுகவுக்குச் சாதகமாகச் செயல்படுவதுதான் என்று குறிப்பிட்டார்.
மேலும், தமிழகத்தில் 11 சதவீதமாக இருந்த பாஜகவின் வாக்கு வங்கி தற்போது 5 சதவீதமாகக் குறைந்துவிட்டதாகவும் அவர் விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், அனைத்துக் கட்சித் தலைவர்களையும் தரம் தாழ்ந்து விமர்சித்து வரும் எடப்பாடி பழனிசாமிக்குத் தோல்வி பயம் வந்துவிட்டதாகக் கூறினார்.
சீட் கேட்டுப் பணம் கட்டியவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் அவர்களை ஏமாற்றிவிட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், தன்னைத் தெருவில் நிறுத்துவதாகக் கூறிய அதிமுக மாவட்டச் செயலாளர் ஏ.கே.செல்வராஜுக்கே தற்போது சீட் மறுக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று கிண்டலாகத் தெரிவித்தார்.
