மத்தியப் பிரதேச மாநிலம் சிஹோரைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் செத் ஜும்மா லாலின் பேரன் விவேக் ருதியா, பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இருந்து ஒரு மிகப்பெரிய தொகையைத் திரும்பப் பெறப் போவதாக அறிவித்துள்ளார். 1917-ல் முதல் உலகப்போர் நடந்த சமயத்தில், நிதி நெருக்கடியில் இருந்த பிரிட்டிஷ் நிர்வாகத்திற்கு செத் ஜும்மா லால் ரூ.35,000 கடனாக வழங்கியுள்ளார். இதற்காக பிரிட்டிஷ் அதிகாரிகள் வழங்கிய அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மற்றும் உயில் ஆகியவை சமீபத்தில் குடும்ப ஆவணங்களைச் சரிபார்த்தபோது விவேக்கிடம் கிடைத்துள்ளன.
1937-ல் ஜும்மா லால் மறைந்த பிறகு, அவரது மகன் மாணக் சந்த் இந்த ஆவணங்களைப் பாதுகாத்து வந்துள்ளார். 2013-ல் அவர் மறைந்ததும் விவேக்கிடம் இந்த ஆவணங்கள் வந்து சேர்ந்துள்ளன. “இது வெறும் பணம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, இது ஒரு வரலாற்று நீதி” என்று கூறும் விவேக், சர்வதேச சட்டங்களின்படி ஒரு நாடு தனது பழைய நிதிப் பொறுப்புகளைத் தவிர்க்க முடியாது என வாதிடுகிறார். 1917-ல் கொடுக்கப்பட்ட அந்த ரூ.35,000, வெறும் பணவீக்கத்தைக் கணக்கிட்டாலே இன்று ரூ.1.85 கோடியாக உயர்ந்துள்ளது. வட்டியுடன் சேர்த்தால் இது பல கோடிகளைத் தாண்டும் என்பதால், விரைவில் பிரிட்டிஷ் அரசுக்கு லீகல் நோட்டீஸ் அனுப்ப விவேக் திட்டமிட்டுள்ளார்.
