திண்டுக்கல் கச்சேரி தெருவில் வசித்து வரும், ராஜஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட பத்மா (25), சப்னா (23) ஆகிய இரு இளம்பெண்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். இவர்களது தந்தை தனராம்,மேற்கு ரதவீதியில் பேன்சி ஸ்டோர் நடத்தி வந்த நிலையில், தொழிலில் ஏற்பட்ட கடுமையான நஷ்டம் காரணமாகப் பெரும் கடன் சுமைக்கு ஆளானார். இதன் காரணமாக, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவி சாந்தி தேவியை ராஜஸ்தானில் உள்ள ஒரு கோவிலில் கைவிட்டுத் திரும்பியுள்ளார்.
தந்தைக்குத் தெரியாமல் வீட்டு வேலை செய்து கொண்டே அஞ்சல் வழிக் கல்வி மூலம் 12-ஆம் வகுப்பு வரை படித்துள்ள இந்த மாணவிகள், வீட்டு வாடகை கொடுக்க முடியாத சூழலில் வீட்டு உரிமையாளரால் சித்திரவதை செய்யப்பட்டு, கட்டாயத்தின் பேரில் வேலைக்குச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், தந்தை தனராம் தான் வாங்கிய கடனை அடைப்பதற்காகத் தனது சொந்த மகள்களையே கொத்தடிமையாக விற்க முயற்சி செய்து வந்துள்ளார் என்ற அதிர்ச்சித் தகவல் புகாரின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்தும், தந்தைக்கு எதிராகப் புகார் அளிக்க வந்தது தெரிந்தால் தங்களை உறவினர்கள் அடித்து ஊனமாக்கி, சொந்த ஊருக்கே கடத்திச் சென்றுவிடுவார்கள் என்றும் அந்தப் பெண்கள் கண்ணீருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு கோரி மனு அளித்துள்ளனர். மேலும் வெளிமாநிலப் பெண்களுக்கு நேர்ந்த இந்தச் சமூக அவலம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
