டெல்லி உயர் நீதிமன்றம், ‘காக்ரோச் ஜந்தா பார்ட்டி’ (Cockroach Janta Party – CJP) என்ற நையாண்டி (Satire) எக்ஸ் பக்கத்தின் முடக்கத்தை உடனடியாக நீக்க மறுத்துள்ளது. இந்த கணக்கை முடக்கிய விவகாரத்தை தகவல் தொழில்நுட்ப விதிகளின் (IT Rules) கீழ் உள்ள ஒரு மறுஆய்வுக் குழு ஆராய்ந்து, ஜூலை 7-ஆம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி புருஷேந்திர குமார் கௌரவ், அவர் இந்தக் குழுவின் முன்பாக ஆன்லைன் மூலம் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளிக்க அனுமதியளித்துள்ளார்.

​மத்திய அரசின் உத்தரவின் பேரில், தேசிய பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு கடந்த மே 21 அன்று இந்த எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், இது வெறும் நையாண்டிப் பக்கம் மட்டுமே என்றும், ஏதேனும் சர்ச்சைக்குரிய பதிவுகள் இருந்தால் அதை மட்டும் நீக்கலாமே தவிர ஒட்டுமொத்த கணக்கையும் முடக்குவது தவறு என்றும் வாதிடப்பட்டது. இருப்பினும், இடைக்காலத் தடையாக இந்த முடக்கத்தை இப்போதே நீக்க முடியாது என்று மறுத்த நீதிபதி, இது தொடர்பாக மத்திய அரசு மற்றும் எக்ஸ் (X) நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி, வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.