கர்நாடக அரசியலில் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் ஆகியோருக்கு இடையே மோதல் நிலவுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சித்தராமையா உருக்கமான விளக்கம் அளித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டி.கே. சிவக்குமாருக்கும் தனக்கும் இடையிலான உறவு “பாலும் தேனும்” கலந்தது போன்றது என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
மேலும் தங்கள் இருவரிடையே பிரிவினையை ஏற்படுத்த எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆர். அசோக் மற்றும் எச்.டி. குமாரசாமி ஆகியோர் முயற்சிப்பதாகவும், ஆனால் அவர்களின் இந்த முயற்சி ஒருபோதும் பலிக்காது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரின் தொலைபேசி அழைப்புகளை தாம் உளவு பார்ப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை சித்தராமையா முற்றிலுமாக நிராகரித்தார்.
இந்நிலையில் சிவக்குமாரை தங்கள் பக்கம் இழுக்க பாரதிய ஜனதா மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் முயற்சி செய்து வருவதாகவும், காங்கிரஸ் அரசின் செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்க சதி நடப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இத்தனை சவால்களையும் தாண்டி, காங்கிரஸ் கட்சி தனது ஐந்து ஆண்டு கால ஆட்சியை முழுமையாக நிறைவு செய்யும் என்றும் அவர் மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
