ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கிய விவகாரத்தில், சீனாவின் டாலியன் நகரில் உள்ள ‘ஹெங்லி பெட்ரோகெமிக்கல்ஸ்’ என்ற எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் மீது அமெரிக்கா அதிரடித் தடை விதித்துள்ளது. இந்தத் தடையின் காரணமாக, அந்த நிறுவனம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற நிறுவனங்கள் அமெரிக்க நிதி அமைப்புகளைப் பயன்படுத்துவதற்கும், அந்நாட்டுடன் வர்த்தகம் செய்வதற்கும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

ஈரானிய எண்ணெய் விற்பனையைத் தடுக்கும் அமெரிக்காவின் தொடர் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சர்வதேச சட்டங்களுக்குப் புறம்பாக, தன்னிச்சையாக விதிக்கப்படும் இத்தகைய தடைகளைத் தாங்கள் எப்போதும் எதிர்ப்பதாகச் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்துள்ளார்.

மேலும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திச் சீன நிறுவனங்களை முடக்குவதை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், தங்கள் நாட்டு நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என்றும் சீனா உறுதியாகக் கூறியுள்ளது.