நடிகர் அஜித்குமாரின் திரைப்பயணத்தில் மைல்கல்லாக அமைந்த ‘மங்காத்தா’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இது தொடர்பாக அஜித் மற்றும் விஜய் ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் கடும் விவாதம் எழுந்துள்ளது.
கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்வெளியான அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ரூ.250 கோடிக்கும் மேல் வசூலித்து நடப்பாண்டின் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. இந்நிலையில், மங்காத்தா படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் ‘தி கிங்மேக்கர்’ எனப் பதிவிட்டது, அப்படத்தின் மறுவெளியீட்டை உறுதி செய்யும் விதமாக அமைந்தது.
வரும் ஜனவரி 23-ஆம் தேதி மங்காத்தா மீண்டும் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், இது விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்தின் வசூலைப் பாதிக்கும் நோக்கில் திட்டமிடப்பட்ட அரசியல் நகர்வு என விஜய் ரசிகர்கள் விமர்சித்துவருகின்றனர்.
இதற்குப் பதிலடி கொடுத்துள்ள அஜித் ரசிகர்கள், கடந்த ஏப்ரல் மாதம் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த போதே, விஜய்யின் ‘சச்சின்’ திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். “உங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளிச் சட்னியா?” என்ற பாணியில் கேள்வி எழுப்பியுள்ள அவர்கள், ஜனவரி 9-ஆம் தேதி வெளியாக உள்ள ‘ஜன நாயகன்’ படத்திற்குப் போட்டியாகமங்காத்தா களமிறங்குவது தற்செயலானது தான் என்று வாதிடுகின்றனர்.
பொங்கல் விடுமுறைக்குப் பிந்தைய வாரங்களில் பெரிய படங்கள் இல்லாத சூழலைப் பயன்படுத்தவே இந்த மறுவெளியீடு திட்டமிடப்பட்டுள்ளதாகத் திரையுலகினர் தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும், கோலிவுட்டின் இரு பெரும் துருவங்களின் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் இணையத்தில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
