சீனாவில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்குத் தங்களது பெற்றோரின் உழைப்பையும், தியாகத்தையும் புரிய வைக்கும் வகையில் ஒரு நெகிழ்ச்சியான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் மற்றும் விவசாயம் போன்ற கடினமான வேலைகளில் பெற்றோர்கள் ஈடுபடுவதை வீடியோவாகப் படம்பிடித்து, அதனைப் பள்ளிக் குழந்தைகளுக்குத் திரையிட்டுக் காட்டினர். தங்களது கல்விக்காகவும், வாழ்க்கைக்காகவும் பெற்றோர்கள் படும் அவஸ்தைகளைக் திரையில் கண்ட மாணவர்கள், எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி வகுப்பறையிலேயே கதறி அழுத காட்சி காண்போரை உருக வைத்துள்ளது.

​தற்போது எக்ஸ் (X) வலைதளத்தில் காட்டுத்தீயாய் பரவி வரும் இந்த வீடியோ, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்காகச் செய்யும் தியாகங்களைச் சொல்லாமல் சொல்கிறது. “பிள்ளைகள் தங்களது பெற்றோரின் கஷ்டங்களை உணர்ந்து நடக்க வேண்டும்” என்ற கருத்தை வலியுறுத்தும் இந்த முயற்சிக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிகிறது. ஒவ்வொரு குழந்தையும் தன் பெற்றோரின் வியர்வையையும், கண்ணீரையும் மதித்து நடக்க வேண்டும் என்பதை இந்த வீடியோ ஆணித்தரமாக உணர்த்துகிறது.