உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள ஷியாம்பூர் பகுதியில், நள்ளிரவில் உலா வந்த கரடி ஒன்று பொதுமக்களையும் மாடுகளையும் துரத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜாஜி தேசிய பூங்காவிலிருந்து வழிதவறி ஊருக்குள் புகுந்ததாகக் கருதப்படும் இந்தக் கரடி, இரவு நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த இரண்டு நபர்களைக் கண்டதும் ஆக்ரோஷமாகத் துரத்தியது.

மேலும் அங்கிருந்த மாடுகளும் கரடியைக் கண்டு மிரண்டு ஓடிய நிலையில், அதிர்ஷ்டவசமாக அந்த நபர்களும் கால்நடைகளும் காயமின்றி உயிர் தப்பினர். இந்த திக் திக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“>

இந்த குடியிருப்புப் பகுதிகளில் கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளதால், ஷியாம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். காடுகள் அழிக்கப்படுவதும், பருவநிலை மாற்றமுமே வனவிலங்குகள் இதுபோன்று மக்கள் வசிக்கும் இடங்களுக்குள் புகுவதற்கு முக்கியக் காரணம் என்று வனத்துறை அதிகாரிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இரவு நேரங்களில் மக்கள் தனியாக வெளியே வர வேண்டாம் என்றும், கரடி மீண்டும் தென்பட்டால் உடனடியாகத் தகவல் தெரிவிக்குமாறும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், அந்த கரடியைப் பிடித்து மீண்டும் வனப்பகுதிக்குள் விடுவதற்கான தீவிர கண்காணிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.