ஐபிஎல் 2026 தொடரின் 27-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்ற நிலையில், அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறனின் அதிரடி சைகை சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது ஏப்ரல் 18 அன்று ஹைதராபாத் உப்பல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி, அபிஷேக் சர்மா (59) மற்றும் ஹென்ரிச் கிளாசன் (59) ஆகியோரின் அதிரடியால் 194 ரன்கள் குவித்தது.
195 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணி, பவர்பிளே ஓவர்களில் அதிரடியாக 76 ரன்கள் குவித்தாலும், இஷான் மலிங்கா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டியின் பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கடைசி ஓவர்களில் இஷான் கிஷன் தலைமையிலான பந்துவீச்சாளர்கள் துல்லியமாகச் செயல்பட்டு 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை உறுதி செய்தனர்.
போட்டி ஹைதராபாத் அணியின் பக்கம் திரும்பியபோது, கேமராக்கள் அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறனை நோக்கித் திரும்பின. அப்போது அவர் உற்சாக மிகுதியில் ஆரஞ்சுப் படை ரசிகர்களைக் கைதட்டி ஊக்குவித்தார்.
https://x.com/UnpairedElect17/status/2045586068356161808
அதேசமயம், மைதானத்தில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களைப் பார்த்து, விராட் கோலி பாணியில் தனது உதட்டில் விரலை வைத்து ‘அமைதியாக இருங்கள்’ உஷ் எனச் சைகை காட்டினார். காவ்யா மாறன் ஒரு தமிழராக இருந்தபோதிலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த சென்னை அணி ரசிகர்களை அவர் அமைதியாக்கியது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. இருப்பினும், தனது அணியின் வெற்றிக்காக அவர் காட்டிய இந்த ஆர்வம் வைரலாகி வருகிறது.
இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி தான் விளையாடிய 6 போட்டிகளில் 3-ல் வெற்றி பெற்று, 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பிளேஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய அடுத்ததாக ஏப்ரல் 21 அன்று டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் தனது சொந்த மண்ணில் மோதவுள்ளது.
