பெங்களூரு டி.தசரஹள்ளியைச் சேர்ந்த 34 வயது பெண்மணி மேக்னா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பெண் தொழிலாளர் சங்கத் தலைவரான இவருக்கு, கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவு 11:45 மணியளவில் முகநூலில் ‘லவ்லி அர்ச்சனா’ என்ற பெயரில் ஒரு பிரண்ட் ரிக்வெஸ்ட் வந்துள்ளது.
அந்தப் ப்ரொபைல் படத்தில் தனது தோழியின் புகைப்படம் இருந்ததால், மேக்னா அதை உண்மை என நம்பி ஏற்றுக்கொண்டார். ரிக்வெஸ்ட்டை ஏற்ற சில நிமிடங்களிலேயே அந்த அக்கவுண்டிலிருந்து வீடியோ கால் வந்துள்ளது. மேக்னா அந்த அழைப்பை ஏற்றபோது, திரையில் ஒரு மர்ம நபர் நிர்வாணமாகத் தோன்றி அநாகரீகமாகச் செயல்பட்டதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்.
உடனடியாக மேக்னா அழைப்பைத் துண்டித்தாலும், அந்த நபர் விடாமல் புகைப்படங்களை அனுப்பித் தொல்லை கொடுத்துள்ளார். இதுமட்டுமின்றி, மேக்னாவின் புகைப்படத்தைத் தனது ப்ரொபைல் படமாக வைத்துக்கொண்டு வாட்ஸ்அப் மூலமாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.
இறுதியில் துணிச்சலுடன் மேக்னா அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸார் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அந்த மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சமூக வலைதளங்களில் தெரியாத நபர்களின் அழைப்புகளை ஏற்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்குச் சான்றாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளது.
